Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்
குடும்பக் கட்டுப்பாடு

பொ. திருகூடசுந்தரம்




ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்


ஆசிரியர்
பொ. திருகூ.ட சுந்தரம் எம்.ஏ., பி.ல்.


முகவுரை
கனம் எம். பக்தவத்சலம்
சென்னை மாநில முதலமைச்சர்


அணிந்துரை
உயர்திரு கு. காமராஜ்
இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர்


ஸ்ரீபாபுஜி பதிப்பகம்
35/1, டாக்டர் பெஸன்ட் ரோடு
சென்னை -1
:

முதற் பதிப்பு : குடும்பக் கட்டுப்பாடு வாரம் 5.12.1966
உரிமை : ஆசிரியரது விலை : ரூ. 1.25


ஆசிரியர் 1891-ஆம் ஆண்டில் பிறந்தவர். 5வது பாரம் முதலே முதற் பரிசு பெற்றார். எம்.ஏ.-இல் பல்கலைக் கழகத் தங்கப்பதக்கம் பெற்ற பேரறிஞர். 1924-ல் வக்கீல் தொழிலைப் புறக்கணித்து காங்கிரஸில் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். காந்தியடிகளின் தத்துவங்களை முதன்முதலில் மொழிபெயர்த்து தமிழர்க்கு உதவினார். தீண்டாமை விலக்குக்குத் தீவிரமாக உழைத்து வந்தார். கள்ளுக்கடை மறியல் நடத்தி சிறை சென்றார். தமிழ் ஹரிஜன் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். ஆங்கிலத்திலும், தமிழிலும் பாண்டித்தியமுடையவர். சென்னை செனட் சபையில் அங்கம் வகித்தார். இலக்கியங்களை ஆராய்ந்து அறியும் ஆற்றல் உடையவர், இலக்கிய கர்த்தாக்களின் குறிக்கோள் என்ன என்பதை சிறிதும் தயக்கமின்றி எடுத்து உரைக்கும் தன்மையுடையவர். தேச முன்னேற்றத்திற்கும் மக்கள் வாழ்வு நலம் பெறவும் சிறுவர் அறிவு பெறவும் பல அரிய நூல்களை எழுதியுள்ளார். பல நூல்களுக்கு அரசாங்கம் பரிசுகள் வழங்கி ஆசிரியரைப் பெருமைப்படுத்தியுள்ளது. கலைக்களஞ்சியக் கூட்டாசிரியராக இருந்தார். தற்போது ஓய்வு பெற்று வருகிறார்.


சென்னை மாநில முதலமைச்சர் கனம் எம். பக்தவத்சலம்
முகவுரை




ஆப்பரேஷன் முறையினால் எவ்விதத் தீமையும் இல்லை என்பதற்கு ஆதாரச்சான்றுகள் தந்தும், இம்முறையினால் பெரும் நன்மை உண்டு என்பதை விளக்கியும் திரு. பொ. திருகூடசுந்தரம் அவர்கள் இச்சிறு நூலை எழுதியிருக்கிறார். ஆப்பரேஷன் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இது மிகவும் பயன்படத்தக்க பிரசுரம். தமிழ் மக்கள் இதைஏற்ற முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இப்பிரசுரத்தை வெளியிடும் ஸ்ரீபாபுஜி பதிப்பக உரிமையாளர் தொடர்ந்து மேலும் மேலும் இம்மாதிரியான மக்களுக்குப் பயன்படக்கூடிய நூல்களை வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன். இவ்வெளியீட்டு உரிமையாளருக்கு என் நல் வாழ்த்துக்கள்.
எம். பக்தவத்சலம்

பொருளடக்கம்

I. ஆப்பரேஷனுக்கு அஞ்சவேண்டாம்

II. எந்த ஆப்பரேஷன் நல்லது

III. சுகமாய் வாழ மூன்று குழந்தைகள் போதும்

IV. நமக்குத் தெரிய வேண்டியவை

V. வ. உ. சி.யும் குடும்பக் கட்டுப்பாடும்

VI. ஆண்மை போகாது

VII. குடும்பக் கட்டுப்பாடுபற்றிய சில முக்கியமான சந்தேகக் கேள்விகள்-ஆசிரியரின் பதில்



குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஜனத்தொகையைக் குறைப்பதற்காக மட்டும் கொண்டு வரப்பட்டதல்ல. பெற்றோர்களின் ஆரோக்கியமும், குழந்தைகளின் நல்வாழ்வும் குடும்பத்தின் சுபீட்சமும் அத்திட்டத்தின் முக்கிய லட்சியங்களாகும். அத்திட்டத்தின் அவசியத்தைப்பற்றி மக்கள் படிப்படியாக உணர்ந்து ஆதரித்து வருகிறார்கள். இன்னும் பெரு வாரியாக மக்கள் இத்திட்டத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் உயர்திரு. திருகூடசுந்தரம் அவர்கள் 'ஆப்பரேஷனுக்கு அஞ்ச வேண்டாம்' என்ற இந்நூலை எழுதியுள்ளார். வெகுகாலமாக இவர் இத்திட்டத்தைப் பற்றி கட்டுரைகள், நாடகங்கள் எழுதியும், கூட்டங்களில் பேசியும் விளக்கி வருகிறார். ஆகவே ஆப்பரேஷன் செய்யும் முறையைப்பற்றியும், அதற்குப் பிறகு எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் பாமர மக்கள் கூட நன்றாக உணர்ந்து கொள்ளும்படி மிகவும் தெளிவாகவும், எளிய முறையிலும் இந்நூலை எழுதியிருக்கிறார். சில இயற்கையான வழிகளையும் இதில் விளக்கியிருக்கிறார். ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெறக்கூடிய இந்த நூலை எழுதிய ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்.

கு. காமராஜ்



பதிப்புரை



நம் தேச முன்னேற்றத்திற்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது உணவு உற்பத்தியைப் பெருக்குவதும் அதற்குத் தக்கபடி மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுமாகும், இதனை உணர்ந்தே நமது நேரு அவர்கள் குடும்பக்கட்டுப்பாட்டின் நன்மையை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும் என்று விரும்பினார்கள். அரசாங்க ரீதியில் நாடு முழுவதும் கையாள வகை செய்தார்கள்.

ஆசிரியர் திரு.திருகூடசுந்தரம் குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்தை உணர்ந்து 1921-ம் ஆண்டு விவாகமானவர்களுக்கு ஒரு யோசனை என்ற நூலை எழுதி வெளியிட்டு அறிஞர்களின் பாராட்டுதலையும் வாசகர்களின் நம்பிக்கையையும் பெற்றார்கள்.

தற்போது குடும்பக் கட்டுப்பாட்டுக்காக கையாளப்படும் எல்லா முறைகளையும் ஆசிரியர் விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து அவற்றுள் சாலச் சிறந்தது ஆப்பரேஷன் முறையே என்பதைப் படங்கள் மூலமும் சந்தேகக் கேள்விகளுக்கு தக்கவிளக்கங்களுடனும் மிகத் தெளிவாக எழுதியுள்ளார்கள்.

எமது பதிப்பகக் குறிக்கோளின்படி குடும்பக் கட்டுப்பாட்டுப் பணியில் பங்கு கொள்ள இந்த நூலை வெளியிடும் வாய்ப்பை எமக்கு அளித்ததற்கு ஆசிரியர் அவர்களுக்கும் இன் நூல் தேசமுன்னேற்றத்திற்கு உகந்தது எனக் கருதி முன்னுரை தந்து எம்மை ஊக்குவிக்கும் முதலமைச்சர் கனம் எம். பக்தவத்சலம் அவர்கட்கும் மக்கள் நலனே தன் லட்சியம் எனக்கொண்டு மக்கள் நல் வாழ்வுக்குரிய இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உயர்திரு கு. காமராஜ் அவர்களுக்கும் எமது நன்றி உரியதாகுக.

வாசகர்கள் இந்த நூலால் அடையும் பயன் ஒன்றே அவர்கள் கூறும் நல்லாசி.

பாபுஜி பதிப்பகம்

உ. தங்கப்பா

பதிப்பக உரிமையாளர்,

ஆப்பரேஷனுக்கு அஞ்ச வேண்டாம்

மனிதன் எந்தச் சிறு காரியமானாலும் திட்டமிட்டே செய்வான். திட்டமிடாமல் செய்யும் காரியம் எதுவும் திருப்தியாய் முடிவதில்லை. முன்கூட்டிச் சிந்தியாமல் செய்தால் வெற்றி பெற முடியாது. தோல்வியே உண்டாகும். அதற்காகவே தமிழ் மக்களுக்குத் தனிப்பெரு வழிகாட்டியாகவுள்ள வள்ளுவர்,

எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.



என்று எப்போதும் எச்சரித்து வருகின்றார்.

ஆனால் மனிதன் நல்வாழ்விற்காகச் செய்யும் காரியங்களில் எல்லாம் அஸ்திவாரமாகவுள்ள காரியம் ஒன்று உள்ளது. மனிதன் அல்லும் பகலும் உழைப்ப தெல்லாம் தன்னுடைய மனைவியும் மக்களும் சுகமாக வாழவேண்டும் என்பதற்காகவே. ஆனால் அதற்குரிய வழியை மட்டும் ஆராய்ந்து காண்பதில்லை. ஆராய்ந்து கண்டாலும் அதை மேற்கொள்வதில்லை. பிறர் ஆராய்ந்து சொன்னாலும் அதைக் கவனிப்பதில்லை.

மனிதன் மணந்து மக்களைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவே விரும்புகின்றான். ஆனால் எவனும் ஒரு பெண்ணை மனைவியாக மணக்கும்போதும் மணந்த பின்னரும் அவனும் அவனுடைய மனைவியும் “மணந்து கொண்டோம். மக்கள் பெறுவோம். ஆனால் எப்போது குழந்தை உண்டாக வேண்டும் ? ஒரு குழந்தை பெற்ற பின் எத்தனை ஆண்டுகள் கழித்து  அடுத்த குழந்தை உண்டாகவேண்டும்? மொத்தம் எத்தனை குழந்தைகள் பெறவேண்டும் ? இந்தக் காரியங்கள் வாழ்க்கையை இன்பமாகச் செய்யவேண்டுமானால், அதற்காகச் செய்யவேண்டிய காரியங்கள் எவை ? என்பன போன்ற விஷயங்களைப் பற்றிக் கனவில்கூடச் சிந்திப்பதில்லை.

ஆனால் இந்த விஷயங்களை அறிந்து அவ்வறிவின் படி நடக்கும் தம்பதிகளே சந்தோஷமாக வாழ்வார்கள். அதை எண்ணி நான் 18 ஆண்டுகட்கு முன்னர் "விவாகமானவர்கட்கு ஒரு யோசனை ” என்ற 'பெயருடன் ஒரு நூலை எழுதினேன். (சென்னை, காந்தி நிலையம் வெளியீடு). அதற்குச் சென்னை ஸ்டான்லி வைத்தியக் கல்லூரியில் தலைவராயிருந்த டாக்டர் டி. எஸ். திருமூர்த்தி முகவுரை எழுதினார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் அந்த நூலைப் பரிசீலனை செய்து பாராட்டுப் பத்திரம் வழங்கினார்கள். அது இப்போது 12-ஆம் பதிப்பாகத் தமிழ் மக்களிடையே உலவி வருகின்றது.

"இப்போது இரண்டு ஆண்டுகளாக விவாகமானவர்கட்கும் விவாகமாகாதவர்க்குமாகக் கீழ்க்கண்ட "மூன்று யோசனைகளைக் கூறி வருகின்றேன் :--

(1) உடல் நலமாக இருக்க விரும்பினால் ஆண், பெண் இருபாலாரும் உடற்பயிற்சி செய்யவேண்டும். நாடோறும் 10 நிமிஷம் ஒழுங்காகச் செய்தால் போதும். தொந்தி உண்டாகாது. உண்டாகியிருந்தால் மறைந்து விடும், நோய் வராது. பெண்களுக்குப் பிரசவத்தில் கஷ்டமிராது.

(2) குழந்தைகளை நன்றாக வளர்க்க விரும்பினால் இரண்டு மூன்றுக்கு அதிகமாகப் பெறலாகாது. அதற்காகக் கணவராவது மனைவியாவது ஆப்பரேஷன் செய்துகொள்ள வேண்டும்.  (3) இக்காலத்தில் உயிர்க்கு ஆபத்து எப்போது நேருமென்று தெரியாதாகையால் குடும்பநலனைப் பாதுகாப்பதற்காகவும், இக்காலத்தில் சேமித்து வைக்க முடியாத அளவு பணச் செலவு அதிகமாவதால் முதுமைக் காலத்தில் கஷ்டப்படாதிருப்பதற்காகவும் ஒவ்வொருவரும் ஆணும் பெண்ணும் இன்ஷூர் செய்வது அவசியம்.

இந்த மூன்று யோசனைகளையும் கேட்பவர்கள் பெரும்பாலும் உடற்பயிற்சி யோசனை பற்றியும் இன்ஷூரன்ஸ் யோசனை பற்றியும் சந்தேகம் எதுவும் கேட்பதில்லை. ஆப்பரேஷன் யோசனை பற்றியே கேட்கிறார்கள்.

ஆப்பரேஷன் என்பது உடலில் அறுப்பதாயிருப்பதால் யாரும் அஞ்சக்கூடியதுதான். ஆப்பரேஷன் செய்யும்படி கூறுகிறீர்களே, அதனால் அபாயம் ஒன்றும் ஏற்படாதா என்று கேட்கிறார்கள். இந்த ஆப்பரேஷன் மிகவும் சிறியது, மயக்க மருந்து எதுவும் கொடுக்கவேண்டியதில்லை. ஏதேனும் சொத்தைப் பல்லைப் பிடுங்கும்போது நோவு தெரியாமலிருப்பதற்காக அந்த இடத்தில் சிறிது மருந்தை ஊசி குத்தி வைப்பது போல் ஊசி குத்தி வைத்துக்கொண்டு அறுப்பார்கள். 15 நிமிஷ நேரத்தில் ஆப்பரேஷன் செய்து கட்டுக் கட்டி விடுவார்கள். அப்போதும் நோவு தெரியாது.

ஆப்பரேஷன் நடந்தபின் படுத்திருக்க வேண்டியதில்லை. மெதுவாக நடந்து வந்து வண்டியில் ஏறி வீட்டிற்கு வரலாம். வீட்டிலும் மெதுவாக நடக்கலாம். பாரங்களைத் தூக்கக்கூடாது. மூன்று நாட்கள் வீட்டில் ஓய்வுகொள்ள வேண்டும். பத்தாம் நாள் மருத்துவர் நூலை உருவி விடுவார். அவ்வளவுதான். ஆதலால் இந்த' ஆப்பரேஷன் செய்வதில் எவ்வித அபாயமுமில்லை ; கஷ்டமுமில்லை. நண்பர்கள் இதைக் கேட்டவுடன், "அபாயமில்லை; குழந்தையும் உண்டாகாது. ஆனால் நாங்கள் இளைஞர்கள். காதல் இன்பத்தை அவ்வளவு சீக்கிரத்தில் இழந்துவிட முடியுமா? என்று கேட்கிறார்கள். சரியான கேள்விதான். எல்லோரும் துறவிகளாக ஆகிவிட முடியாது. ஆனால் நண்பர்கட்கு இந்த அச்சம்



வேண்டியதில்லை. ஆப்பரேஷன் செய்தபோதிலும் இன்பம் துய்க்கலாம். அதில் எவ்வித மாறுதலும் உண்டா

காது. குழந்தை பிறக்காது என்பதைத் தவிர வேறு எவ்வித வேறுபாடும் கிடையாது. குழந்தை எப்படி உண்டாகிறது ? ஆண்மகனுடைய விதையில் பெண்ணிடமுண்டாகும் முட்டையுடன் சேர்ந்து கருவுண்டாக்கும் விந்துயிர்கள் உண்டாகின்றன. அவை ஒரு மெல்லிய குழாய் வழியாகச் சென்று விந்துப் பை என்ற பையில் சேர்கின்றது. கலவி சமயத்தில் அவை வேறு சில சுரப்பு நீர்களுடன் சேர்ந்து கோசம் (ஆண் குறி) வழியாக வெளியேறுகின்றன. அவை பெண்ணின் கருப்பை வழியாகச் சினைக் குழாய்க்குள் நுழைகின்றன. சினைக்குழாய்க்கு வரும் முட்டையுடன் அவ்வுயிர்களுள் ஒன்று கலந்துவிடுகிறது. அதைத்தான் கரு உண்டாவதாகச் சொல்லுகிறோம்.

விந்து விந்துப்பைக்குச் செல்லும் குழாயை விந்துக் குழாய் (Vas) என்பர். ஆப்பரேஷன் செய்யும்போது டாக்டர் அந்தக் குழாயின் நடுப்பாகத்தில் அரை அங்குலம் வெட்டி எடுத்துவிட்டு வெட்டுப்பட்ட இருமுனைகளை இறுகக் கட்டி விடுகிறார். அதனால் இந்த ஆப்பரேஷன் விந்துக் குழாய் வெட்டல் (Vasectomy) எனப் படும்.

விந்துக் குழாயில் அரை அங்குலம் வெட்டி எடுத்து விடுவதால் விதையிலிருந்து விந்து விந்துப்பைக்குப் 'போய்க் கலவிச் சமயத்தில் குய்யம் (பெண் குறி) உள்ளே சென்று கரு உண்டாக்குவது தடைப்பட்டு விடுகின்றது.

விதையானது விந்துயிர்களை மட்டும் உண்டாக்குவதில்லை. அது விதை ஹார்மோன் என்னும் ஒருவித சுரப்பு நீரை உண்டாக்குகின்றது. அந்த நீர் உண்டாகாவிட்டால் விந்து உண்டானாலும் பயனில்லை. அந்த நீர்தான் ஆண்மை தருவது. ஆண்மை என்பது ஆண் குறி பெண் குறிக்குள் நுழையக்கூடிய அளவு கட்டியாகி நிற்பதாகும்.

விந்துக் குழாயை வெட்டிவிட்டால் விந்துயிர்கள் வெளிப்படா. விந்து நீர் சுரப்பது நிற்பதில்லை. அதனால் ஆப்பரேஷன் செய்துகொள்பவர்கள் முன்போலவே கலவி இன்பம் துய்ப்பார்கள். அதில் எவ்விதக் குறைவும் ஏற்படுவதில்லை.

நான் இவ்விதம் விளக்கிச் சொன்னபோதிலும் சில நண்பர்களுக்கு அச்சம் விட்டு விலகுவதில்லை. இந்த ஆப்பரேஷன் செய்தால் மூளைக் கோளாறு ஏற்படுமாமே என்று கேட்கிறார்கள். அப்படி அவர்கள் கேட்பதற்குக் காரணம் சில டாக்டர்கள் தான்.

என்னுடைய நண்பர் ஒருவரிடம் சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள டாக்டர் ஒருவரும், கோவையிலுள்ள டாக்டர் ஒருவரும் கூறியதுண்டு என்பதை அறிவேன்.

இவர்கள் மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் விந்துக் குழாய் வெட்டும் ஆப்பரேஷன் செய்தால் மூளைக்கோளாறு உண்டாகும் என்று எதை வைத்துக் கூறுகிறார்கள் என்று விளங்கவில்லை.

ஆனால் விஷயம் யாதெனில் மருத்துவ நிபுணர்கள் எல்லோரும் மூளைக்கோளாறு உண்டாகாது என்று மட்டும் கூறவில்லை. மனோசக்தி பெருகும் என்றே உலகப் பிரசித்தி பெற்ற அறுவை வைத்திய நிபுணர் சர். ஆர்பத்நெட் லேன், உலகப் புகழ் பெற்ற காம நூல் அறிஞர் ஹாவ்லக் எல்லிஸ் போன்றவர்கள் கூறுகிறார்கள். (இங்கிலாந்து எலிசபெத் இராணியின் மருத்துவர் ஹார்டர் பிரபு பதிப்பாசிரியராகவிருந்து வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் மருத்துவக் கலைக் களஞ் சியம் 11-ஆம் தொகுதி 579-580 பக்கங்கள் பார்க்க). உண்மையிலேயே மனிதன் கலை, இசை, இலக்கியம் போன்ற படைப்புத் தொழில் செய்வதற்கு வேண்டிய சக்தியை அளிப்பது விதையில் உண்டாகும் ஹார்மோன் சுரப்பு நீரேயாகும். ஆதலால் ஆப்பரேஷன் செய்தால் மூளைக்கோளாறு உண்டாகும் என்று கூறுவோர்க்கே மூளைக்கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்று கூற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஆகவே நண்பர்களே ! ஆப்பரேஷன் செய்வதால், அபாயம் எதுவும் உண்டாகாது. காதல் இன்பம் முன் போலவே துய்க்கலாம். ஆண்மை என்பது அணுவளவும் குறையாது. அறிவு கெட்டுப் போகாது. அறிவு சக்தி அதிகப்படவே செய்யும்.

குழந்தை மட்டும் பிறக்காது. மூன்று குழந்தைகள் போதும். அவர்களை அறிவறிந்த நன்மக்களாக வளர்க்கும் பெரும்பேற்றுடன் இன்பமாய் வாழுங்கள். அது உங்களுக்கும் நன்மை. உங்களைப் பெற்றெடுத்த நாட்டிற்கும் நன்மை.



குறிப்பு

(1) அரசாங்க மருத்துவ இல்லங்களில் இந்த ஆப்பரேஷனை இலவசமாகச் செய்கிறார்கள்.

(2) அரசாங்க ஊழியர்கள் செய்து கொண்டால் சம்பளத்துடன் ஏழு நாள் ரஜா பெறுவார்கள்.

எந்த ஆப்பரேஷன் நல்லது?

நாடு நலம் பெறவும், நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும் நலம்பெறவும் ஒவ்வொரு தம்பதிகளும் இரண்டு மூன்று குழந்தைகட்கு அதிகமாகப் பெறலாகாது என்று அறிஞர்கள் கூறி வருகிறார்கள். அரசாங்கத்தாரும் அவ்விதமே பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அப்படியானால் எல்லோரும் காதலின்பம் அனுபவிப்பதை விட்டுத் துறவிகளாக ஆகிவிட வேண்டுமோ, அது எல்லோர்க்கும் சாத்தியப்படுமோ ? என்று சிலர் கேட்கிறார்கள். இரண்டு மூன்று குழந்தைகள் போதும் என்று கூறுவோர் யாரையும் துறவுகொள்ளச் சொல்லவில்லை. காதலின்பத்தை விட்டுவிடவேண்டும் என்று கூறவில்லை. அவர்கள்

காதல் காதல் காதல்-இல்லையாயின்

சாதல் சாதல் சாதல்



என்று பாரதியார் பாடியதை அறிவார்கள், அதைச் சரியென்று ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்கள்.

அவர்கள் காதலின்பம் வேண்டாம் என்று கூறவில்லை, அதிகக் குழந்தைகள் வேண்டாம் என்றே கூறுகிறார்கள். காதலின்பம் துய்த்தால் கருத்தரிக்குமே என்றால் காதலின்பம் துய்த்தாலும் கருத்தரியாமல் இருப்பதற்கான வழிகளை டாக்டர்கள் கண்டு பிடித்திருக்கிருர்கள். கணவனோ மனைவியோ ஒரு ஆப்பரேஷ்ன் செய்துகொண்டால் கருத்தரியாது என்று கூறுகிறார்கள்.

டாக்டர்கள் கூறும் இந்த ஆப்பரேஷன்கள் சிறியவை, எளிதில் செய்யக் கூடியவை, எவ்வித அபாய மும் இல்லாதவை, காதலின்பம் கடுகளவும் குறையாது. குழந்தை மட்டும் பிறக்காது. ஆப்பரேஷன் செய்து கொள்பவர்க்கு உடல்நலம் முன்னிலும் சிறந்ததாக இருக்கும். இந்த ஆப்பரேஷனை வெள்ளைக்கார நாடு களில் கிழவர்கள் பலமாக இருப்பதற்காகச் செய்து கொள்கிறார்கள்.

இத்துணைச் சிறந்த ஆப்பரேஷன்கள் யாவை என்று அறிவதற்குமுன் கருப்பம் எவ்வாறு உண்டாகின்றது என்று அறிந்துகொண்டால் நல்லது.

கருப்பம் உண்டாவதற்கு வேண்டிய விந்துயிர்கள் கணவனுடைய விதைகளில் உற்பத்தியாகின்றன. அவை மிக மெல்லிய விந்துக் குழாய்கள் வழியாகச் சென்று விந்துப் பைகளில் தங்குகின்றன. கலவி செய்யும்போது கணவனுடைய கோசத்தில் ஒரு. வழ வழப்பான விந்து நீர் சுரக்கும். விந்துப் பைகளிலுள்ள விந்துயிர்கள் அந்த விந்து நீரில் மிதந்து கோசத்தின் வழியாகக் குய்யத்தில் பாயும். பின் அவை கருப்பப் பை வழியாகச் சென்று சினைக்குழாயினுள் செல்லும்.

ஒவ்வொரு மாதமும் சினைப் பையிலிருந்து ஒரு முட்டை வெளியாகி சினைக் குழாய்க்கு வந்து சேரும். இந்த மாதம் வலது பையிலிருந்து வலது குழாய்க்கு வந்தால் அடுத்த மாதம் இடது பையிலிருந்து இடது குழாய்க்கு வந்து சேரும். விந்துயிர்கள் சினைக் குழாயில் நுழையும்போது அங்கு முட்டை இருக்குமாயின் அதனுடன் கலக்க முயலும். ஏதேனும் ஒரு விந்துயிர் முட்டையுடன் கலந்துவிடுமாயின் அதுவே கருவாகும். உடனே மற்ற உயிர்கள் இறந்துபோகும். கருவானது கருப்பப் பைக்கு வந்து தங்கி வளர்ந்து பத்து மாதங்கள் சென்றதும் குழந்தையாகப் பிறக்கும்.

ஆகவே குழந்தை உண்டாவதற்கு, கருப்பம் தரிப்ப தற்கு இரண்டு காரியங்கள் நடைபெறவேண்டும். 1. கோசத்தின் வழியாகக் குய்யத்துள் பாயும் விந்து,நீரில் விந்துயிர்கள் இருத்தல் வேண்டும். 2. சினைப் பையிலிருந்து முட்டை சினைக் குழாய்க்கு வந்து சேர வேண்டும். இந்த இரண்டு காரியங்களும் நிகழ்ந்தால்தான் விந்துயிர் முட்டையுடன் கலந்து கரு உண்டாகும். ஆதலால் கரு உண்டாகாதிருக்க வேண்டுமாயின் 1. விந்துயிர் குய்யத்துள் வந்து சேராதபடி தடுத்துவிடவேண்டும். அல்லது 2. முட்டை, சினைப் பையிலிருந்து சினைக் குழாய்க்கு வந்து சேராதபடி தடுத்துவிட வேண்டும்.



டாக்டர்கள் விந்துபிரைத் தடுப்பதற்காகக் கணவனுடைய விந்துக் குழாய்கள் ஒவ்வொன்றிலும் அரை அங்குலம் வெட்டி எடுத்துவிட்டு அறுத்த முனைகளை இறுக்கிக் கட்டிவிடுகிறார்கள். இந்த ஆப்பரேஷனை “விந்துக் குழாய் வெட்டல்' என்று கூறுவார்கள். இந்த ஆப்பரேஷன் செய்தால் விதையில் உற்பத்தியாகும் விந்துயிர்கள் விந்துப் பைக்குச் செல்ல முடியாது. அதனால் அவை குய்யத்துக்குள் வந்து சேர வழியில்லை. விந்துயிர் குய்யத்துள் வராவிட்டால் கருப்பம் எப்படித் தரிக்க முடியும்? முடியாது.

 இதில் சினைக் குழாய் வெட்டியது தெரிகிறது.

டாக்டர்கள் முட்டையானது சினைக் குழாய்க்கு வருவதைத் தடுப்பதற்காக இரண்டு சினைக் குழாய்கள் ஒவ்வொன்றிலும் அரை அங்குலம் வெட்டி எடுத்து விட்டு அறுத்த முனைகளை இறுக்கிக் கட்டிவிடுகிறார்கள். அதனால் முட்டை சினைக் குழாய்க்கு வராது. விந்துயிர்கள் மட்டும் வந்து பயனில்லை. கருப்பம் தரிக்காது. இந்த ஆப்பரேஷனைச் 'சினைக் குழாய் வெட்டல்' என்று கூறுவார்கள். இந்த இரண்டு ஆப்பரேஷன்களில் எதைச் செய்து கொண்டாலும் கருப்பம் உண்டாகாது, குழந்தை பிறக்காது. ஆனால் சிலர் என்னிடம் இரண்டு ஆப்பரேஷன் கள் கூறுகிறீர்களே, அவற்றுள் எந்த ஆப்பரேஷன் நல்லது என்று கேட்கிறார்கள். எந்த ஆப்பரேஷனைச் செய்வதிலும் கஷ்டமில்லை, அபாயமுமில்லை, எதைச் செய்தாலும் குழந்தை பிறக்காது. ஆதலால் இரண்டு ஆப்பரேஷன்களும் நல்லவைகளே. ஆயினும் எதைச் சிபார்சு செய்கிறீர்கள் என்று கேட்டால் நான் கணவன் செய்யும் ஆப்பரேஷனையே சிபார்சு செய்வேன். அதற்குரிய காரணங்கள் இவை:-

1. கணவன் எந்த நேரத்திலும் செய்துகொள்ளலாம். மனைவி குழந்தை பெற்று மூன்றாவது நாளே செய்யலாம். மற்ற வேளைகளில் செய்வதானால் வயிற்றைக் கீறியே செய்யவேண்டும். அதையும் அபாயமில்லாமலே டாக்டர்கள் செய்கிறார்கள். ஆயினும் அது அவசியமில்லை, குழந்தை பெற்றவுடன் செய்வதே நல்லது. அப்போது வயிற்றைக் கீறவேண்டாம். குய்யம், கருப்பப் பை முதலியவை குழந்தை வெளிவரக் கூடிய அளவு விரிந்திருக்குமாதலால் அதன் வழியாகவே ஆப்பரேஷனை எளிதில் செய்துவிடுவார்கள்.

2. கணவனுக்குச் செய்யும் ஆப்பரேஷன் வயிற்றுக்கு வெளியே நடப்பது. ஆனால் மனைவிக்குச் செய்யும் ஆப்பரேஷன் வயிற்றினுள்ளே நடப்பது. அதனால் கணவன் ஆப்பரேஷன் மனைவி ஆப்பரேஷனை விட எளிது.

3. ஆதலால் கணவன் வைத்தியசாலையில் படுத்திருக்க வேண்டியதில்லை. ஆப்பரேஷன் முடிந்ததும் வீட்டுக்கு வந்துவிடலாம். வீட்டிலும் நாலைந்து நாள் அதிகமாக நடக்காமலிருந்தால் போதும். படுத்திருக்க வேண்டியதில்லை.

ஆகவே இரண்டு மூன்று குழந்தைகள் உடைய தந்தை மார்களே! எவ்விதத் தயக்கமுமின்றி ஆப்பரேஷன் செய்துகொள்ளுங்கள். தமிழ்நாட்டிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளிலெல்லாம் இலவசமாகவும் மிகுந்த கவனமாகவும் ஆப்பரேஷன் செய்கிறார்கள். ஆப்பரேஷனைச் செய்து உங்களுக்கும் உங்கள் மனைவி மார்க்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நலம் தேடுமாறு: வேண்டிக்கொள்கிறேன்.

ஆதலால் இந்த ஆப்பரேஷனால் தீமை உண்டாகும் என்று ஆங்கில மருத்துவர் எவரேனும் கூறினால் அவர் அக்கிரமமாகக் கூறுகிறார் என்றும், வேறு மருத்துவர் எவரேனும் கூறினால் அவர் அறியாமையினால் கூறுகிறார் என்றும் எண்ணி அவர்கள் கூறுவதைக் கவனித்தலாகாது.

ஆகவே, மூன்று குழந்தைகள் போதும் என்று முடிவு செய்து கொள்ளுகிறவர்கள் இந்த ஆப்பரேஷனை இம்மியும் அச்சமின்றிக் செய்து கொள்ளலாம். செய்து, கொண்டால் நன்மையே அடைவார்கள்.



ஆதலால்

1. ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தால் தாய் அடுத்த குழந்தையை மருத்துவச்சாலையில் பிரசவிக்க வேண்டும். மருத்துவசாலைக்குச் சென்றதும் மருத்துவரிடம் ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்று சொல்லவேண்டும். மருத்துவர் குழந்தை பிறந்த மறு நாள் ஆப்பரேஷனை மிக எளிதாக எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் செய்துவிடுவார். குழந்தை பெற்றதற்காக. எத்தனை நாள் அங்கே இருக்கவேண்டுமோ அத்தனை நாள் இருந்தால் போதும். அதிகநாள் இருக்க வேண்டியதில்லை.

2, ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்தால் தந்தை இந்தக் கட்டுரையைப் படித்தவுடனேயே மருத்துவ இல்லத்துக்குப் போய் ஆப்பரேஷன் செய்து கொள்ள வேண்டும். அரசாங்க மருத்துவ இல்லங்களில் இலவசமாக ஆப்பரேஷனும் செய்வார்கள். ஆப்பரேஷன் செய்தபின் முப்பது ரூபாயும் தருவார்கள்.

ஆப்பரேஷன் செய்தபின் தந்தை மருத்துவ இல்லத்தில் படுத்திருக்க வேண்டியதில்லை. வீட்டிலும். படுத்திருக்க வேணடியதில்லை. அதிகமாக நடக்காமல் ஒருவாரம் ஓய்வாக இருந்தால் போதும்.

ஆகவே சகோதரர்களே! சகோதரிகளே! நீங்களும் உங்கள் மூலமாக நாட்டிலுள்ளவர்களும் சுகமாக வாழ வேண்டுமானால் மூன்று குழந்தைகள் போதும் என்று மனத்தில் உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்கேற்ப ஆப்பரேஷன் செய்து கொள்ளுங்கள். நன்மை அடைவீர்கள். அஞ்சவேண்டாம்.



சுகமாய் வாழ

மூன்று குழந்தைகள் போதும்



நமது இந்திய நாடு இரு நூறு ஆண்டுகளாக ஆங்கிலேயர்க்கு அடிமையாகி எங்கும் காண முடியாத வறுமையில் ஆழ்ந்து வாடியது. காந்தியடிகள் போதனையின்படி காங்கிரஸ் மகாசபை செய்த பெரு முயற்சியின் காரணமாக இந்திய மக்கள் 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ம் நாள் சுதந்திரம் பெற்றார்கள்.

இந்திய மக்கள் சுதந்திரமாக வாழ விரும்புவது போலவே சுகமாக வாழவும் விரும்புகிறார்கள். அதற்கு வறுமை ஒழிய வேண்டும்; வருமானம் பெருக வேண்டும். அவ்வாறு செய்வதற்காக அரசாங்கத்தார் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுத்து அரும்பாடுபட்டு வருகிறார்கள்.

ஆயினும் அவற்றால் நன்மையை உடனே பெற்று விடமுடியாது. பல ஆண்டுகள் செல்லும். அதுவரை ஒவ்வொருவரும் தம்முடைய சக்திக்கும் சமய சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவாறு ஒரு குறிப்பிட்ட அளவு வருமானமே தேட முடியும்.

அந்த வருமானத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொரு தாயும் தந்தையும் ஒருவாறு அதிகக் கஷ்டமின்றி வாழ்க்கையை நடத்துவதற்கு வேண்டிய வழிகளை வகுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வகுத்து வாழ்க்கையைச் சுகமாக நடத்த விரும்புகிறவர்கள் மூன்று காரியங்கள் செய்ய வேண்டும். முதலாவதாக

மூன்று குழந்தைகள் போதும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அதனால் உண்டாகக். கூடிய நன்மைகள் பல. அவற்றுள் முக்கியமானவை இவை:--

1. தாய் பலமுறை பிரசவித்தால் அவளுடைய உடல் நலம் குன்றும். மூன்று குழந்தைகள் போதும் என்று தீர்மானித்துக் கொண்டால் அவள் தன் குழந்தைகளை நன்றாகக் கவனித்து வளர்ப்பதற்கு வேண்டிய ஆற்றலும் ஆரோக்கியமும் உடையவளாக இருப்பாள்.

2. தந்தை அதிகக் குழந்தைகள் ஆய்விட்டதே, எவ்வாறு வளர்க்கப் போகிறோம் என்று கவலைப்பட வேண்டியதில்லை. மூன்று குழந்தைகள் மட்டும் இருந்தால் அவர்களை நல்லவிதமாக அதிகக் கஷ்டமின்றி வளர்க்க முடியும்.

3. குழந்தைகள் சத்தான உணவும், சுத்தமான உடையும் நல்ல விதமான சூழ்நிலையும் பெறுவார்கள். நோய் நொடியின்றி வளர்வார்கள். தங்கள் சக்திக்கு, ஏற்றவிதமான கல்வியைப் பெற்று சந்தோஷமாக வாழ்வார்கள்.



இரண்டாவதாக

ஒரு குழந்தை பெற்று மூன்று ஆண்டுகள் சென்ற. பிறகே அடுத்த குழந்தை உண்டாக வேண்டும் என முடிவு செய்து கொள்ள வேண்டும். அவ்விதமானால் தாயின் உடல் நன்கு தேறி பலம் பெறும், குழந்தையை, நன்றாகக் கவனிக்க முடியும், குழந்தையும் நன்கு, வளரும். அந்த மூன்று ஆண்டுகளில் குழந்தை உண்டாகாமல் இருப்பதற்காக இரண்டு வழிகள் இருக்கின்றன. 1. மாதவிடாய் கண்டபின் பத்தாம் நாள் முதல் இருபதாம் நாள்வரை காதல் செய்யாமல் இருக்க வேண்டும். மற்ற நாட்களில் காதல் செய்யலாம். இந்த வழியை மேற்கொண்டால் அநேகமாகக் குழந்தை உண்டாகாது.

2. சலவை செய்த மெல்லிய மிருதுவான பழந் துணியைக் கிழித்துப் பெண் உறுப்பில் இறுக்கமாக நுழைக்கக் கூடிய அளவாகப் பந்துபோல் சுருட்டி அது பிரிந்து போகாதபடி நூலால் கட்டவேண்டும். நூல் ஒரு சாண் நீளம் தொங்க வேண்டும். இந்தப் பந்துகள் நாலைந்து செய்து சுத்தமான டப்பாவில் மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய் எண்ணெய் இரண்டு பங்கு, வேப்ப எண்ணெய் ஒரு பங்காகக் கலந்து ஒரு குப்பியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

காதல் செய்யுமுன் எண்ணெய்யில் துணிப் பந்தைத் தோய்த்துப் பெண் உறுப்பில் கடைசி வரைத் தள்ளி வைக்க வேண்டும். கணவரும் ஆண் உறுப்பில் இந்த எண்ணெய்யைத் தடவ வேண்டும்.

காதல் முடிந்ததும் பந்தை எடுக்கக் காலையில் நூலைப் பிடித்து இழுத்து வெளியே எடுத்து எறிந்து விடவேண்டும். இந்த வழியைச் சிரமம் பாராமல், தவறாமல் கையாண்டால் குழந்தை நிச்சயமாக உண்டாகாது.

இந்த இரண்டு வழிகளும் மிகவும் எளியவை, கொஞ்சமும் கஷ்டமில்லாதவை, இவற்றால் எவ்விதத் தீமையும் ஏற்படாது நன்மையே உண்டாகும்.



மூன்றாவதாக

மூன்று குழந்தைகள் போதும் என்று முடிவு செய்வோர் மீண்டும் குழந்தைகளைப் பெறாமலிருப்பதற்குத் துணையாக மருத்துவர்கள் ஒரு சின்னஞ் சிறிய ஆப்ப ரேஷனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது இருபது நிமிஷத்தில் முடிந்து விடும். மயக்க மருந்து தரமாட்டார்கள். வலி கொஞ்சமும் தெரியாது. ஆப்பரேஷனால் எவ்விதக் கெடுதலும் உண்டாக மாட்டாது.

இந்த ஆப்பரேஷனைக் கணவனாவது மனைவியாவது செய்து கொண்டால் போதும். குழந்தை பிறக்காது என்பதைத் தவிர வேறு எவ்வித வேறுபாடும் இருக்காது. கணவனும் மனைவியும் முன்போலவே இன்பத்தை அனுபவிக்கலாம். அதில் அணுவளவுகூடக் குறைவு ஏற்படாது.

மேனாட்டில் முதியவர்கள் இளைஞர்கள் போல பல முடையவராக இருப்பதற்காக இந்த ஆப்பரேஷனைத் தான் செய்து கொள்கிறார்கள். அதனால் கணவனோ மனைவியோ ஆப்பரேஷன் செய்து கொண்டால், ஆப்பரேஷனுக்குப் பின்னால் அதிக பலமே உண்டாகும்.

ஆறு மாதங்களுக்குமுன் திரு. கிருஷ்ணன் என்பவர் ஒருவர் தாம் ஆப்பரேஷன் செய்து கொண்டதால் ஆண்மையை இழந்து விட்டதாகத் தினத்தந்தி பத்திரிகையில் எழுதினார். நான் அவருக்குக் கடிதம் எழுதினேன். அவர் என்னிடம் வந்தார். விபரங்களைக் கூறினார். அவர் ஆண்மை இழந்ததற்குக் காரணம் ஆப்பரேஷன் செய்ததல்ல, ஆப்பரேஷன் செய்ததால் ஆண்மை போய்விடுமோ என்று அவர் அஞ்சியதே யாகும் என்று விளக்கிச் சொன்னேன்.

அவர் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தாம் ஆண்மையை மீண்டும் பெற்றுவிட்டதாகவும் அதனால் என்னைத் தமது குலதெய்வமாகப் போற்றுவதாகவும் கடிதம் எழுதினார். ஆகவே, ஆப்பரேஷனால் எவ்விதக் கேடும் உண்டாகவே மாட்டாது.

இந்த ஆப்பரேஷனை ஆங்கில மருத்துவர்களே கண்டு பிடித்திருக்கிறார்கள். அதனால் இதைப் பற்றி ஏதேனும் அறிய விரும்பினால் அந்த மருத்துவ நூல்களையே பார்க்க வேண்டும். அந்த மருத்துவ நூல் எதுவும் ஆப்பரேஷனால் கேடு உண்டாகுமென்று கூற வில்லை. எல்லா நூல்களும் நன்மை உண்டாக்கும் என்றே கூறுகின்றன.

ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யூனானி போன்ற இதர வைத்திய முறைகளுக்கு இந்த ஆப்பரேஷனைப் பற்றி எதுவும் தெரியாது. ஆகவே, அந்த வைத்தியர்களிடம் இதைக் கேட்பதில் பயனில்லை.

ஆதலால் இந்த ஆப்பரேஷனால் தீமை உண்டாகும் என்று ஆங்கில மருத்துவர் எவரேனும் கூறினால் அவர் அக்கிரமமாகக் கூறுகிறார் என்றும் வேறு மருத்துவர் எவரேனும் கூறினால் அவர் அறியாமையினால் கூறுகிறார். என்றும் எண்ணி அவர்கள் கூறுவதைக் கவனித்தலாகாது.

ஆதலால்

1. ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தால் தாய் அடுத்த குழந்தையை மருத்துவச் சாலையில் பிரசவிக்க வேண்டும். மருத்துவர் குழந்தை பிறந்த மறு நாள் ஆப்பரேஷனை மிக எளிதாக எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் செய்து விடுவார், குழந்தை பெற்றதற்காக மருத்துவச்சாலையில் இருக்க வேண்டிய நாள் இருந்தால் போதும்.

2. ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்தால் தந்தை உடனேயே மருத்துவ இல்லத்துக்குப் போய் ஆப்பரேஷன் செய்து கொள்ளவேண்டும்.

ஆப்பரேஷன் செய்தபின் மருத்துவ இல்லத்தில் படுத்திருக்க வேண்டியதில்லை. வீட்டிலும் படுத்திருக்க வேண்டியதில்லை. அதிகமாக நடக்காமல் ஒரு வாரம் ஓய்வாக இருந்தால் போதும்.

ஆகவே சுகமாக வாழவேண்டுமானால் மூன்று குழந்தைகள் போதும் ஆப்பரேஷன் செய்து கொள்ளுங்கள். நன்மை அடைவீர்கள். அஞ்சவேண்டாம்.

நமக்குத் தெரிய வேண்டியவை



கமலம்: என்னாங்க இவ்வளவு நேரம், ஏதேனும் கூட்டத்துக்குப் போனீர்களோ, எங்கே என்ன கூட்டம், இராத்திரி பத்து மணிக்கு மேலாச்சே.

சுந்தரம்: ஆமாம் கமலம், கூட்டத்துக்குத்தான் போய் வந்தேன். பத்திரிகை படிக்க வாசகசாலைக்குப் போனேன், அங்கே கூட்டம் என்று சொன்னார்கள், போனேன்.

கமலம்: கூட்டம் எங்கே, யார் பேசினார்கள்?

சுந்தரம்: பஞ்சாயத்து ஆபீசுப் பக்கத்தில் பாரதி மைதானம் இருக்கிறதல்லவா, அங்குதான் கூட்டம், சென்னையிலிருந்து ஒரு பெரியவர் வந்து பேசினார்.

கமலம்: என்ன பேசினார், காங்கிரசைப் பற்றியா, காங்கிரசுக்கு விரோதமாகவா? எப்போதும் இந்த இரண்டு பேச்சுத்தானே.

சுந்தரம்: ஆமாம் இரண்டு விஷயங்கள் தான். ஆனால் இன்று அவர் காங்கிரசைப் பற்றியும் பேசவில்லை, காங்கிரசுக்கு விரோதமாகவும் பேசவில்லை.

கமலம்: பின் வேறு எதுபற்றிப் பேசினார்?

சுந்தரம்: அவரே சொன்னார், அவைகளைப் பற்றிப் பேச வரவில்லை, எல்லோர்க்கும் பொதுவான --- எல்லோரும் கட்டாயமாக அறிந்துகொள்ள வேண்டிய --- ஒரு விஷயம் பற்றியே பேசப் போகிறேன் என்று சொன்னார்.  கமலம்: அது என்ன கட்டாயமாக அறிய வேண்டிய விஷயம்? விளங்கவில்லையே.

சுந்தரம்: ஒவ்வொரு குடும்பத்தாரும் தாங்களும் தங்கள் குழந்தைகளும் சுகமாக சந்தோஷமாக வாழ வேண்டும், குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க வேண்டும், நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

கமலம்: ஆமாம் அப்படித்தான் ஆசைப்படுகிறோம், அதற்காக அவர் என்ன சொன்னார்?

சுந்தரம்: ஆசைப்படுவதில் குற்றமில்லை, அவ்விதம் தான் ஆசைப்பட வேண்டும், ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டும் சிந்தித்துப் பார்ப்பதேயில்லை.

கமலம்: ஏன் சிந்திப்பதில்லை. சிந்தித்துத் தானே ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்கப் பாடுபடுகிறார்கள். பணம் இருந்தால்தானே சந்தோஷமாக வாழலாம், நல்லவிதமாகக் குழந்தைகளை வளர்க்கவும் படிப்பிக்கவும் முடியும்?

சுந்தரம்: ஆமாம் கமலம், அதையே தான் அந்தப் பெரியவரும் கூறினார். பணம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. ஆனால் ஒவ்வொருவரும் ஏராளமாகச் சம்பாதித்துவிட முடியாது. அவரவர் சக்திக்குத் தக்க படிதான் சம்பாதிக்க முடியும்.

கமலம்: அது என்னவோ உண்மைதான். பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் படிக்கிறார்கள், ஆனால் எல்லாப் பிள்ளைகளும் ஒரே மாதிரியாக மார்க்கு வாங்கிவிடுவதில்லை.

சுந்தரம்: அதனால் அந்தப் பெரியவர் என்ன சொல்லுகிறார் தெரியுமா? ஒவ்வொருவரும் தாம் எவ்வளவு சம் பாதிக்க முடியும் என்று முதலில் யோசிக்க வேண்டும். பிறகு தாம் சம்பாதிப்பதைக்கொண்டு எத்தனை குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க முடியும் என்று யோசிக்க வேண்டும் என்று கூறினார்.

கமலம்: ஆமாம் அது உண்மைதான். அதிக வருமானமில்லாவிட்டால் அதிகக் குழந்தைகளை வளர்க்க முடியாது தான். எதிர்த்த வீட்டு அண்ணாவுக்கு வருமானம் குறைவு, அதனால் ஆறு குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர் படுகிற பாடு கடவுளுக்குத்தான் தெரியும்.

சுந்தரம்: அந்தக் குழந்தைகளைப் பார்த்தால் எவ்வளவு பரிதாபமாயிருக்கிறது. நல்ல உணவில்லை, நல்ல உடையில்லை. எலும்பும் தோலுமாக இருக்கின்றன. எப்போது பார்த்தாலும் ஒன்று மாறி ஒன்றுக்கு நோய்; டாக்டர் ஆஸ்பத்திரியில் இல்லாத மருந்து ஏதாவது எழுதிக்கொடுத்தால் அதை வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

கமலம்: ஆமாம், ஆனால் அடுத்த விட்டு அண்ணாவுக்கும் அதே வருமானம் தான். ஆனால் மூன்று குழந்தைகளே யிருப்பதால், அவைகள் நன்றாக இருக்கின்றன. அழகான சட்டை, அழகான பாவாடை வாங்கிக் கொடுக்கிறார்கள். குழந்தைகள் செழிப்பாகக் கொழு கொழு என இருக்கின்றன. அவைகளை வாரி எடுத்து முத்தவேணும் போல் இருக்கிறது. நீங்கள் இல்லாத வேளையில் அவைகளைக் கூட்டி வைத்துத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

சுந்தரம்: இதைத்தான் அந்தப் பெரியவர் பல விதமாக எடுத்து விளக்கினார். நீ வரவில்லையே என்று தோன்றிற்று.  கமலம்: அப்படியானால் அதிக வருமானம் உடையவர்களே அதிகக் குழந்தைகள் பெறலாம் என்று தோன்றுகிறது.

சுந்தரம்: அப்படியில்லை, கமலம்! விரலுக்குத் தக்க வீக்கம் என்று சொல்வதில்லையா. ஏழைவீட்டுக் குழந்தை பள்ளிக்கூடத்துக்கு நடந்துபோகும். பணக்கார வீட்டுக் குழந்தை வண்டியில் போகும். அதனால் அவரவர் அந்தஸ்துக்குத் தக்கபடி செலவு செய்ய வேண்டும்.

கமலம்: அப்படியானால் பணக்காரர்கள் கூட அதிகக் குழந்தைகள் பெறக்கூடாது என்று சொல்லுகிறாரோ?

சுந்தரம்: ஆமாம் கமலம்! அப்படித்தான் சொல்லுகிறார். ஏழையோ பணக்காரரோ மூன்று குழந்தைகள் போதும் என்கிறார். அப்படியானால்தான் குழந்தைகளை நல்லவிதமாக வளர்க்க முடியும் என்று சொல்லுகிறார்.

கமலம்: நானும் அப்படித்தான் எண்ணுகிறேன். ஆனால் மூன்று குழந்தைகள் பெற்றபின் எல்லோரும் சன்னியாசியாகிவிட வேண்டும் என்றால் அது எப்படி முடியும்? யாரும் சம்மதிக்கமாட்டார்கள்.

சுந்தரம்: நீ சொல்லுவது சரிதான். சன்னியாசியாகச் சொன்னால் சம்மதிக்கமாட்டார்கள். ஆனால் அந்தப் பெரியவர் யாரையும் சன்னியாசியாகச் சொல்லவில்லை.

கமலம்: எனக்கு நீங்கள் சொல்லுவது விளங்கவில்லை. சன்னியாசிபோல் இருக்காமல் எப்படிக்குழந்தை பெறாமல் இருக்க முடியும் என்று தெரியவில்லை.

சுந்தரம்: அந்தப் பெரியவர் சொல்லுகிறார். மூன்று குழந்தைகள் பெற்றபிறகு சன்னியாசி யாகாமல் கணவனும் மனைவியும் எப்போதும் காதலராக வாழ்ந்து கொண்டு குழந்தை பெறாமலிருக்க முடியும், அதற்காக டாக்டர்கள் ஓர் ஆப்பரேஷன் கண்டுபிடித்திருக்கிறார்களாம். கணவனாவது மனைவியாவது செய்துகொண்டால் பிறகு குழந்தை உண்டாகாதாம். குழந்தைதான் உண்டாகாதே தவிர வேறு எந்த வித்தியாசமும் ஏற்படாதாம். கணவனும் மனைவியும் முன்போலவே சந்தோஷமாக வாழ்வார்களாம்.

கமலம்: ஆனால் ஆப்பரேஷன் என்கிறீர்களே? ஆப்பரேஷன் என்றால் அறுப்பதல்லவா? அதை யார் செய்ய முடியும், வேறு வழி யில்லையா? வேறு வழி சொன்னால்தான் யாரும் கேட்பார்கள்.

சுந்தரம்: கமலம்! உன் மாமாவுக்குப் பல் சொத்தையாகி நோவாயிருந்ததே ஞாபகமிருக்கிறதா?

கமலம்: ஆம், அதற்கு மாமா டாக்டரிடம் கொண்டு காட்டினார். டாக்டர் அந்தப் பல்லுக்குப் பக்கத்திலே ஏதோ கொஞ்சம் மருந்து குத்தினாராம், அப்போது மட்டும் சுருக்கென்று இருந்ததாம். பிறகு பல்லைப் பிடுங்கியபோது நோவே யில்லையாம். அதற்கும் நீங்கள் சொல்லும் ஆப்பரேஷனுக்கும் என்ன சம்பந்தம்?

சுந்தரம்: சம்பந்தமா ? குழந்தை பெறாமலிருப்பதற்காக டாக்டர்கள் கண்டுபிடித்திருக்கும் ஆப்பரேஷனும் அதைப்போல எளிதாம். அறுக்கும்போதும் பிறகும் நோவாதாம். கால்மணி நேரத்தில் முடிந்து விடுமாம். ஆணுக்குச் செய்தால் அவர் ஆஸ்பத்திரியில் படுத்திருக்க வேண்டாம், வீட்டுக்கு வந்து வீட்டிலும் படுத்திருக்க வேண்டாம், ஏழெட்டு நாள் ஓய்வாக இருந்தால் போதும்.  கமலம்: அப்படியானால் பெண்ணுக்குச் செய்யும் ஆப்பரேஷன் கஷ்டமானதோ?

சுந்தரம்: இல்லை, அதுவும் எளிதானது தான். ஆனால் ஆணுக்கு எந்த நேரமும் செய்யலாம். பெண்ணுக்கு என்றால் அவள் குழந்தை பிரசவிக்கும் பொழுதுதான் செய்வார்கள். அப்போது அவளுக்குக் கொஞ்சமும் நோயில்லாமலே செய்துவிடுவார்கள்.

கமலம் : அது சரி, அப்படியானால் அதற்காக அவள் எத்தனை நாள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும் ?

சுந்தரம் : குழந்தை பெற்றவள் ஏழெட்டு நாள் படுத்திருப்பாள் அல்லவா? அது போல் படுத்திருந்தால் போதும், ஆப்பரேஷன் செய்ததற்காக அதிக நாள் ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டியதில்லை.

கமலம் : இந்த ஆப்பரேஷன்கள் இவ்வளவு எளிதாக இருக்கும்போது ஏன் எல்லோரும் செய்யாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சுந்தரம் : இப்படி ஒருவர் வந்து எளிதாக விளக்கிச் சொன்னால்தானே தெரியும். அதோடு ஆப்பரேஷன் என்றவுடன் நீ பயப்பட்ட மாதிரி மற்றவர்களும் விஷயம் அறியாமல் பயப்படுவார்கள் அல்லவா ?

கமலம் : ஆனால் இப்போது நமக்கு விஷயம் விளங்கி விட்டதால் நாம் இந்த யோசனைப்படியே நடப்போம். அடுத்த பிரசவ சமயத்தில் ஆப்பரேஷன் நான் செய்து கொள்கிறேன்.

சுந்தரம் : அது வேண்டாம் கமலம், உனக்குக் குழந்தை உண்டானவுடனே நானே போய்ச் செய்து கொண்டு வருகிறேன். ஆண்கள் ஏன் பெண்களைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்று அந்தப் பெரியவர் கூறினார். அவர் கூறுவது சரிதானே. கமலம் : சரி உங்கள் விருப்பம்போல் செய்யுங்கள், கடைசியாக அந்தப் பெரியவர் என்ன சொல்லி முடித்தார் ?

சுந்தரம் : அவர் மூன்று விஷயங்கள் கூறி அவற்றை எல்லோரும் மறக்காமல் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கமலம் : அந்த விஷயங்கள் என்ன ?

சுந்தரம் : முதலாவதாக ஒவ்வொருவரும் மூன்று குழந்தைகளுக்கு அதிகமாகப் பெறுவதில்லை என்று முடிவு செய்துகொள்ளவேண்டும். முடிவு செய்து கொண்டு அந்த முடிவுப்படியே நடப்பேன் என்று நாள் தோறும் மனத்தில் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று சொன்னார்.

கமலம் : ஆமாம். அப்படித்தான் செய்துகொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியம் என்று இப்போது விளங்குகிறது. அவர் அடுத்த விஷயம் என்ன சொன்னார் ?

சுந்தரம் : அடுத்த விஷயமா ? ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தால் மனைவி அடுத்த பிரசவத்துக்கு ஆஸ்பத்திரிக்குப் போய்விட வேண்டும். போனதும் டாக்டரிடம், எனக்கு இனிமேல் குழந்தை வேண்டாம் ஆப்பரேஷன் செய்துவிடுங்கள் ' என்று கூறவேண்டும். டாக்டர் குழந்தை பிறந்த மறுநாள் அல்லது அதற்கு மறுநாள் ஆப்பரேஷனை எவ்விதக் கஷ்டமுமில்லாமல் செய்துவிடுவார்.

கமலம்: அதைத்தான் நானும் சொன்னேன், நமக்கு சொர்ணமும் பொன்னியும் இருக்கிறார்கள், போதும். மூன்றாம் பிரசவத்துக்கு ஆஸ்பத்திரிக்கும் போய் ஆப்பரேஷன் செய்து கொள்வேன். ஆனால்  நீங்கள் செய்து கொள்வதாகச் சொல்லுகிறீர்கள், அதுவும் சரிதான்.

சுந்தரம்: அந்தப் பெரியவர் மூன்றாவது விஷயம் என்ன கூறினார் தெரியுமா? 'ஏற்கனவே மூன்று குழந்தைகளிருந்தால் கணவன் உடனே நாளையே ஆஸ்பத்திரிக்குப் போய் ஆப்பரேஷன் செய்து கொள்ள வேண்டும். ஒருநாள் கூடக் காலதாமதம் செய்யக் கூடாது, மெத்தனமாய் இருந்துவிடலாகாது என்று கூறினார்.

கமலம்: ஆமாம் அவர் கூறுவது சரிதான். என்றைக்குக் குழந்தை உண்டாகும், என்றைக்கு உண்டாகாது என்று எவராலும் கூற முடியாது அல்லவா?

சுந்தரம்: இந்த மூன்று விஷயங்களையும் எல்லோரும் ஞாபகத்தில் வைத்து நடந்தால் நாட்டுக்கு நன்மை உண்டாகும் என்று சொல்லித் தம்முடைய உரையை முடித்தார்.

கமலம்: அவர் கூறுவது முழுவதும் உண்மை; அதில் சந்தேகமே இல்லை.



* * *



இந்தியா சுதந்திரம் அடையுமுன் டக்கா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராயிருந்த ஸர் பிலிப் ஹார்ட்டாக் மனைவியார் (ஹார்ட்டாக் சீமாட்டி) இந்தியா பற்றி எழுதியுள்ளநூலில் கூறுவது :

குடும்பக் கட்டுப்பாடு செய்யாமல் குடும்பத்தின் செல்வ நிலையை உயர்த்த முடியாது என்று அறிந்து மக்களிடையே குடும்பக்கட்டுப்பாடு முறைகளைப் பரவச் செய்யும் அரசாங்கம் இந்த உலகத்தில் இந்திய அரசாங்கம் ஒன்றே.



* * *



வ. உ. சியும் குடும்பக் கட்டுப்பாடும்

நானும் என் மனைவியும் 1934ஆம் ஆண்டில் தூத்துக்குடியிலுள்ள என் தங்கை வீட்டுக்குப் போயிருந்தோம். அப்போது அங்குள்ள சில நண்பர்கள் என்னுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குக் குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள் இந்த நல்ல விஷயத்தை எங்களுக்கு மட்டும் சொன்னால் போதாது. ஒரு கூட்டம் கூட்டுகிறோம், பொதுமக்கள் எல்லோருக்கும் கூறவேண்டும். நாட்டின் நலத்துக்கு அத்துணை அடிப்படை விஷயமாய் இருக்கிறதே இது என்று கூறினார்கள்.

அவ்விதமே அவர்கள் அன்று மாலை ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு டாக்டர் தலைமை வகித்தார். இக் காலத்தில் குடும்பக்கட்டுப்பாடு என்று கூறுவதை முற்காலத்தில் பச்சையாகக் கருப்பத்தடை என்று கூறினோம். அதனால் கூட்டம் சிறியதாகவே இருந்தது. ஆயினும் நான் விஷயத்தை விளக்கியபோது வந்திருந்த மக்கள் உற்சாகம் காட்டினார்கள். எனக்கும் அதுதான் முதன் முதலாகக் கருப்பத் தடை பற்றிப் பேசிய பொதுக்கூட்டம். வந்திருந்தவர்களும் முதன்முதல் இந்த விஷயத்தைக் கேட்பது அப்போதுதான்.

மறுநாள் காலையில் நானும் என் மனைவியும் தேச பக்தர் சிதம்பரனார் அவர்களைப் பார்ப்பதற்காகப் போனோம். அவர்கள் என்னைக் கண்டதும் என்ன தம்பி, நேற்றுப் பிரசங்கம் செய்தீர்களாமே, எனக்குத் தெரியாமல் போயிற்றே என்று கூறினார்கள். அதற்கு நான் :-- ஆமாம் நண்பர்கள் ஏற்பாடு செய்தார்கள். பேசினேன். ஆனால் அந்த விஷயம் தங்களுக்குத் தேவையில்லையே.

வ. உ, சி :-- ஆமாம் தம்பி! எனக்கு வயதாயிற்று, தேவையில்லை தான், ஆனால் என் மகளுக்குத் தேவையாயிற்றே.

நான் :- ஏன் அவளுக்கு எத்தனை குழந்தைகள், அதிகமோ ?

வ. உ. சி :- இதுவரை மூன்றுதான், ஆனால் இனி எத்தனையோ, யார் அறிவார்? ஆனால் நான் அறிய விரும்பியது வேறு விஷயம்.

நான் :- என்ன விஷயம், எனக்கு விளங்கவில்லையே.

வ. உ. சி :- தம்பி! ஐப்பசி கார்த்திகை மாதங்களில் அடைமழை பெய்கிறதல்லவா ? அந்தக் காலத்தில் குழந்தை பெறாமல் பங்குனி சித்திரையில் பெறுவது தான் நல்லது, அதற்கு வழி உண்டு என்று நேற்று கூறினீர்களாமே, அந்த வழிதான் எனக்குத் தெரிய வேண்டும்.

நான் : ஏன் அதைக் கேட்கிறீர்கள், நீங்கள் தான் இனிக் குழந்தை பெறப் போவதில்லையே.

வ. உ. சி : இல்லை தம்பி, என் மகள் எப்போதும் பிரசவத்துக்கு இங்கு வருகிறாள், அவள் எப்போதும் வருவது மழை கொட்டும் காலத்திலேயே. அதனால் நான் படும்பாடு அதிகம். டாக்டரைக் கூப்பிட முடியாது, மருத்துவச்சியையும் கூப்பிட முடியாது. அதோடு தாய்க்கும் குழந்தைக்கும் குளிர் தாங்கமுடியாமல் கஷ்டம், இப்படி எத்தனையோ துன்பங்கள்.

நான் : நீங்கள் கூறுவது உண்மைதான். அதனால் தான் நான் நேற்று மழை காலத்திலோ பனிக்காலத்திலோ குழந்தை பெறாமல் நல்ல சுகமான வசந்த காலத்தில் குழந்தை பெறவேண்டும் என்று கூறினேன்.

வ. உ. சி : ஆமாம் தம்பி ! பங்குனி சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி இந்த ஆறு மாதங்களிலும் மழையில்லை, பனியில்லை, குளிரில்லை. இந்தக் காலத்தில் பெறுவதுதான் நல்லது; ஆனால் அதற்கு வழி என்ன, சொல்லுங்கள்.

நான் : அதற்கு வழியிருக்கிறது, மிகவும் சுலபமான வழி, எல்லாப் பயிருக்கும் எப்போது விதைக்க வேண்டும், எப்போது அறுக்கவேண்டும் என்ற கால அளவு உண்டு.

வ. உ. சி : ஆமாம் அது உண்டு, அதற்கும் குழந்தை பெறுவதற்கும் என்ன சம்பந்தம் ?

நான் : என்ன இப்படிச் சொல்லுகிறார்கள் ? மக்கட் பயிருக்கும் கால அளவு எல்லோர்க்கும் ஒன்றுபோல் தானே.

வ. உ. சி : மக்களையும் பயிர் என்றே சொல்லுகிறீர்களா? அதுவும் பொருத்தம்தான்.

நான் : பாருங்கள், மக்கள் பயிர்க்கு எப்போதும் பத்து மாதம் என்று சொல்லுவார்கள், ஆனால் கணக்காகப் பார்த்தால் 280 நாட்களே.

வ. உ. சி : அப்படியானால் பத்து மாதங்கள் என்பது சந்திர மாதங்களாக இருக்கும். சந்திர மாதம் என் பதற்கு 28 நாட்கள்தான்.

நான் : ஆமாம் நீங்கள் சொல்வதுதான். அதனால் எந்த மாதம் குழந்தை பிறக்கவேண்டும் என்று எண்ணு கிறீர்களோ, அதற்கு 280 நாட்களுக்கு முன் கருத்தரிக்க வேண்டும் என்று ஆகிறதல்லவா ?

வ. உ. சி : ஆமாம், அதனால் பங்குனியில்-வசந்த கால ஆரம்பத்தில் பிறக்க வேண்டுமானால் முந்தின ஆனி மாதம் கருப்பம் உண்டாகவேண்டும், அப்படித் தானே தம்பி!

நான் : ஆமாம், அதனால் பங்குனி முதல் ஆவணி வரை குழந்தை பிறக்கவேண்டுமானால் ஆனி முதல் கார்த்திகைவரை கருத்தரிக்க வேண்டும்.

வ. உ. சி : அதுசரி தம்பி, ஆனால் நான் கேட்பது அதுவல்ல. புரட்டாசி முதல் மாசிவரை மழைக் காலமும் பனிக்காலமும் ; அந்தக் காலத்தில் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு வழி என்ன? அதை அல்லவோ அறிய விரும்புகிறேன்.

நான் : அதில் என்ன கஷ்டம் ? ஆனிமுதல் கார்த்திகை வரை கர்ப்பம் உண்டானால் நல்லது என்று கண்டோம் அல்லவா? அதனால் மார்கழி முதல் வைகாசி வரை கருப்பம் உண்டாகக் கூடாது, அவ்வளவுதானே.

வ. உ. சி : அது சரிதான் தம்பி! அந்த மாதங்களில் கருப்பம் உண்டாகாவிட்டால் மழை காலத்தில் குழந்தை பிறக்காது, அது தெரிகிறது. ஆனால் அந்த மாதங்களில் கருப்பம் உண்டாகாதிருப்பதற்கு வழி என்ன ? அந்த மாதங்களில் காதல் செய்யக் கூடாது என்று கூறுகிறீர்களா ?

நான் : அப்படிச் சொல்லவில்லை. சொன்னால் அது நடக்கக்கூடிய காரியமில்லை.

வ. உ. சி : பின் என்ன செய்யவேண்டும் என்று கூறுகிறீர்கள்?  நான் : அந்த மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் மாதவிடாய் கண்ட 10 ஆம் நாள் முதல் 19ஆம் நாள் வரை மொத்தம் 10 நாட்கள் காதல் செய்யாமல் இருந்தால் போதும், கருப்பம் உண்டாகாது.

வ. உ. சி : அப்படியானால் அந்தப் பத்து நாட்கள் தவிர மற்ற நாட்களில் காதல் செய்யலாம், அப்படிச் சொல்லுங்கள். இதைச் சொன்னால் யாரும் தடை சொல்லமாட்டார்கள். இன்னொன்று தம்பி ! அப்படியானால் எல்லா மாதங்களிலும் இந்த மாதிரி நடந்து கொண்டால் குழந்தை உண்டாவதையே தடுத்து விடலாம் போலிருக்கிறதே.

நான் : ஆமாம். அதில் சந்தேகமில்லை. இரண்டு மூன்று குழந்தைகள் உள்ளவர்கள், இனி வேண்டாம் என்று எண்ணினால் இந்த முறையைக் கையாண்டால் போதும், பிறகு குழந்தைகள் உண்டாகாது. பெற்ற குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்கலாம்.

வ. உ. சி : தம்பி நீங்கள் சொல்வது மிகவும் எளிதாகக் கையாளக்கூடிய முறையாக இருக்கிறது. இதை நான் என் மருமகப்பிள்ளையிடம் சொல்லுகிறேன், அவர் இதை ஏற்றுக்கொள்வார் என்றே நம்புகிறேன்.

இவ்வாறு தேசபக்தர் அவர்கள் மழை காலத்தில் குழந்தை பெறாமலிருப்பதற்கான முறையைக் கேட்டுக் கொண்டபின் கம்பராமாயணம் போன்ற இலக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள். ஒருமணி நேரம் அவர்களுடன் இருந்துவிட்டு நானும் என் மனைவியும் விடை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினோம்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்தது எல்லோர்க்கும் பயன்படும் என்று இங்கு எழுதுகின்றேன்.



ஆ ண் மை போ கா து

என்னிடம் வருகிறவர்களிடம் நான் மூன்று குழந்தைகள் பெற்றதும் ஆப்பரேஷன் செய்துகொள்ளுங்கள் என்று கூறுவது வழக்கம். சிலர் "நீங்கள் கூறுவது நியாயம்தான். மூன்று குழந்தைகள் போதும், இரண்டுகூடப் போதும் என்று சில வேளைகளில் தோன்றுகிறது. ஆனால் ஆப்பரேஷன் செய்துகொள்ளச் சொல்லுகிறீர்களே, ஆப்பரேஷன் செய்தால் குழந்தை பிறக்காது என்றால் ஆப்பரேஷனால் ஆண்மை போய் விடுமல்லவா ? அது உண்டாகாமல் இருப்பதற்காகக் காளைக்குக் காயடிக்கிறார்களே, தாங்கள் கூறும் ஆப்பரேஷனும் அது போன்றதுதானே ? என்று கேட்கிறார்கள்.

இவர்கள் நினைப்பது தவறு. நான் கூறும் ஆப்பரேஷனால் ஆண்மை போகாது, அத்துடன் நான் கூறும் ஆப்பரேஷன் வேறு, காயடிக்கும் ஆப்பரேஷன் வேறு. இரண்டையும் விளக்குகின்றேன்.

இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள் கருவுண்டாக்கும் சக்தியையே ஆண்மை என்று எண்ணுகிறார்கள். ஆனால் கருவுண்டாக்கும் சக்தி வேறு. ஆண்மைச் சக்தி வேறு. ஒருவனுடைய கோசம் குய்யத்துள் நுழையக் கூடிய அளவு கட்டியாக ஆகுமானால் அப்போதே அவன் கலவி செய்யமுடியும். அந்தக் கலவி செய்யும் சக்தியே ஆண்மைச் சக்தியாகும். சில கணவன்மார் கலவி செய்வார்கள், ஆயினும் அவர்களுடைய மனைவிமார்க்குக் கருவுண்டாகிக் குழந்தை பிறவாதிருக்கும். இதிலிருந்து கலவி செய்யும் சக்தி வேறு, கருவுண்டாக்கும் சக்தி வேறு என்பதும், கருவுண்டாக்கும் சக்தி இல்லாதிருந்தபோதிலும் கலவி செய்யும் சக்தியாகிய ஆண்மை இருந்துகொண்டே இருக்கும் என்பதும் விளங்கும்.

ஆண்மகனுடைய விதைகள் இருவித நீர்களை உண்டாக்குகின்றன. ஒன்றை அகச்சுரப்பு என்றும் மற்றதைப் புறச்சுரப்பு என்றும் மருத்துவர்கள் கூறுவர். அகச்சுரப்புதான் ஆணினிடம் மீசைமுளைக்கச் செய்யும், பருவகாலத்தில் குரலை மாறச்செய்யும், உடம்பை ஆண் உருவம் கொள்ளச் செய்யும், பெண்ணிடம் காதல் கொள்ளச் செய்யும், கலவி செய்தற்கேற்றவண்ணம் கோசத்தைக் கட்டியாக்கும். ஆகவே ஆண்மை அல்லது கலவி செய்யும் சக்தியைத் தருவது இந்த அகச் சுரப்பேயாகும்.

கலவியின் இறுதியில் கோசத்திலிருந்து புறச் சுரப்பு நீர் குய்யத்துள் பாயும். அந்த நீர் விந்து எனப் பெறும். அதில் மிதக்கும் விந்துயிர்களில் ஒன்று பெண்ணின் சினைக்குழாய்க்கு வரும் முட்டையுடன் கலக்கும் போது கருவுண்டாகும். ஆகவே அகச்சுரப்பு நீர் கலவி செய்யும் சக்தியைத் தரும், புறச்சுரப்பு நீர் கரு உண் டாக்கும் சக்தியைத் தரும்.

நான் கூறும் “விந்துக்குழாய் வெட்டுதல் என்னும் ஆப்பரேஷனைச் செய்தால் புறச்சுரப்பு நீர் உண்டாகாது, அதனால் கருவுற்பத்தியாகாது. அவ்வளவே. ஆப்பரேஷனால் அகச்சுரப்பு நீர் உண்டாவது நிற்காது, அதனால் கலவி செய்யும் சக்தியாகிய ஆண்மை போகாது, அதுமட்டுமல்ல, புறச்சுரப்பு நின்று விடுவதால் அகச் சுரப்பு அதிகப்படும், அதனால் ஆண்மை சக்தி மிகும் என்றே மருத்துவர்கள் கருதுகிறார்கள். 

இரண்டாவதாக

நான் கூறும் விந்துக்குழாய் வெட்டுதல் என்னும் ஆப்பரேஷன் வேறு, காளைகளுக்குக் காயடித்தல் என்னும் ஆப்பரேஷன் வேறு. காயடித்தல் என்பது விதைகளை நீக்கிவிடுதல் என்பதாகும். விதைகளை நீக்கிவிட்டால் அகச்சுரப்பு நீருமில்லை, புறச்சுரப்பு நீருமில்லை. ஆண்மகன் ஒருவனுக்கு அவ்விதம் செய்தால் அவன் கலவியும் செய்யமுடியாது, கருவுண்டாக்கவும் முடியாது. அதனால் விதையை நீக்கும்போதே அதாவது அகச்சுரப்பு நீரை இல்லாமற் செய்யும்போதே ஆண்மை போகும். நான் கூறும் ஆப்பரேஷனால் புறச் சுரப்பு நீர் மட்டுமே உண்டாகாது. அகச்சுரப்பு நீர் உண்டாகிக்கொண்டே இருக்கும். அதனால் ஆண்மை போகாது, இருந்துகொண்டே இருக்கும். கணவன் கலவி செய்வான், முன்போல் இன்பம் துய்ப்பான், ஆனால் குழந்தை மட்டும் பிறக்காது.

ஆதலால் கணவன்மார்களே! ஆப்பரேஷனால் ஆண்மை போகாது. அதிகப்படவே செய்யும், அஞ்ச வேண்டியதில்லை, ஆப்பரேஷனைச் செய்து கொள்ளுங்கள், நன்மையே அடைவீர்கள்.



* * *



விக்டோரியா மகாராணியார்

1841 சனவரி 15ம் நாள்

தம் மாமா பெல்ஜிய அரசருக்கு எழுதிய கடிதம்

அன்புமிக்க மாமா அவர்களே நான் மீண்டும் குழந்தை பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பமாட்டீர்கள். நான் குடும்பத்தைப் பெருக்கினால் நமக்கும் நாட்டுக்கும் நன்மை உண்டாகாது. எனக்குத் துன்பமும் அசெளகர்யமுமே உண்டாகும். அதிகமாகக் குழந்தைகள் பெறுவது பெண்களுக்கு எத்துணைக்கஷ்டமான காரியம் என்பதை ஆண்கள் எண்ணிப் பார்ப்பதேயில்லை.

குடும்பக் கட்டுப்பாடு

ப ற் றி ய

சில முக்கியமான கேள்விகள்



மகாத்மா காந்தியடிகளும் போப்பாண்டவரும் குடும்பக் கட்டுப்பாடு வேண்டாம், குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கவேண்டாம் என்று கூறுவதாகச் சொல்லு கிறார்களே, அது உண்மைதானா ? எனச் சிலர் கேட்பர்.

போப்பாண்டவர் உலகத்திலுள்ள நாடுகள் அனைத்திலும் வாழ்ந்துவரும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு லோக குரு, மகாத்மா காந்தியடிகள் ஆங்கி லேயர்க்கு இருநூறு ஆண்டுகளாக அடிமையாயிருந்து அல்லலுற்ற இந்திய மக்களுக்கு விடுதலை தேடித்தந்த பாரத தேசத்தின் தனிப்பெரும் பிதா.

இவர்கள் இருவரும் குடும்பக் கட்டுப்பாடு வேண் டாம், பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளிக்கொண்டே இருக்கலாம் என்று கூறவில்லை. அதற்கு மாறாக அவர்கள் இருவரும் குடும்பக் கட்டுப்பாடு அவசியம் வேண்டும், அதிகக் குழந்தைகளைப் பெறலாகாது என்றே கூறுகிறார்கள். போப்பாண்டவர் உபதேசம் இது : பெற்ற குழந்தைகள் போதும் என்று எண்ணுகிறவர்கள் மீண்டும் குழந்தைகளைப் பெறாமல் இருப்பதற்காக இயற்கை முறைகளையே கையாளவேண்டும், செயற்கை முறை களைக் கையாளலாகாது. மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள மாத்திரைகளும் களிம்புகளும் கருவிகளும் செயற்கை முறைகள். இனிக் குழந்தைகள் வேண்டாம் என்று எண்ணுகிறவர்கள் இந்த மருத்துவ முறைகளை விட்டுவிட்டு இனிக் காதல் செய்வதில்லை என்று மனத்தில் உறுதி செய்துகொண்டு அவ்விதம் காதல் செய்யாமல் இருந்துவிடவேண்டும், இந்த இயற்கை முறையே சரியான முறை. ஆனால் எல்லோர்க்கும் இது சாத்தியப் படாது, எல்லோரும் மனத்தை அடக்கிக்கொண்டு காதல் செய்வதை அறவே துறந்துவிட முடியாது. அவர்கள் காதல் செய்யவும் வேண்டும், குழந்தை உண்டாகாமலும் இருக்கவேண்டும் என்றே எண்ணுவார்கள் அதற்கும் ஓர் இயற்கையான முறை இருக்கிறது. குழந்தை வேண்டாம் என்று எண்ணினாலும் காதல் செய்யாமல் இருக்க முடியாது என்று நினைப்பவர்கள் கருத்தரிக்கும் நாட்களில் காதல் செய்யாமல் கருத்தரிக் காத நாட்களில் காதல் செய்யலாம். இதில் தவறு ஏதுமில்லை.

அமெரிக்க நாட்டில் மார்கரட் ஸாங்கர் என்ற பெயருடைய ஓர் அம்மையார் இருக்கிறார். அவர் தாம் அந்த நாட்டில் முதன் முதலாகக் குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை எடுத்துக்காட்டி அதற்கான முறைகளைப் பரவச் செய்தவர். அவர் இப்போது சர்வதேசக் குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் தலைவராக இருந்துவருகிறார். அவர் 1936-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்திருந்தார். மகாத்மா காந்தியடிகளுடன் குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். காந்தியடிகளும் போப்பாண்டவரைப் போலவே மருத்துவர் கூறும் செயற்கை முறைகளை ஆதரிக்கவில்லை. அதோடு போப்பாண்டவர் கூறும் காதல் செய்யாதிருக்கும் முறையையே ஆதரித்தார். அது எல்லோர்க்கும் சாத்தியப்படாது என்பதை அம்மையார் வற்புறுத்தி வாதித்தார். அதன்மேல் காந்தியடிகள் சரி, அப்படி யானால் குழந்தைகள் வேண்டாம் என்று எண்ணுகிறவர்கள் கருத்தரியா நாட்களில் காதல் செய்யட்டும், மற்ற நாட்களில் காதல் செய்யாதிருக்கட்டும் என்று கூறினார். ஆகவே காந்தியடிகளும் போப்பாண்டவரைப் போலவே குழந்தை பெறாமலிருப்பதற்காகக் (1) காதல் செய்யாதிருத்தல் என்னும் முறையையும், (2) கருத்தரிக்கும் நாட்களில் காதல் செய்யாதிருத்தல் என்னும் முறையையும் ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகும்.

ஆகவே இந்த இரண்டு உலகப் பெரியார்களும் குடும்பக் கட்டுப்பாடு வேண்டாம் என்று கூறவில்லை. அதற்கு மாறாக அவர்கள் வேண்டும் என்றே கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் வழிகள் நான் கூறும் வழிகளுக்கு வேறானவை. அவ்வளவே.

(2) அப்படியானால் மருத்துவர்கள் கூறும் செயற்கை முறைகளை விட்டு விட்டு இயற்கை முறைகளைக் கையாளலாம் அல்லவா ? ஆப்பரேஷன் வேண்டாம் அல்லவா ? எனச் சிலர் கேட்பார்.

1952-ஆம் வருஷம் நவம்பர் மாதத்தில் பப்பாய் நகரத்தில் சர்வதேசக் குடும்பக் கட்டுபாட்டு மகாநாடு நடைபெற்றது. உலகம் புகழும் தத்துவ ஞானியும் பாரத தேசத்தின் ராஷ்டிரபதியுமான டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்கள் அந்த மகாநாட்டை. ஆரம்பித்து வைத்தார். அப்போது அவர் செய்த சொற்பொழிவில் செயற்கை முறைகள் வேண்டாம், இயற்கை முறைகள் தான் வேண்டும் என்று கூறுகிறவர்களுக்குத் தக்கவாறு பதில் கூறியுள்ளார். அவர் கூறுவதன் சாரம் இது :- நமக்குக் கடவுள் அறிவு கொடுத்திருப்பது நாம் அதைப் பயன்படுத்துவதற்காகவே, நாம் அறி வைப் பயன்படுத்தி இயற்கையை, அடக்கி ஆண்டு நமக்கு நன்மையான பலவற்றைத் தேடிக் கொள்கின்றோம், அங்ஙனமிருக்கக் குடும்பக் கட்டுப்பாட்டு விஷயத்தில் மட்டும் அறிவைப் பயன்படுத்த வேண்டாம், இயற்கைப்படியே நடக்கவேண்டும் என்று கூறுவது பொருந்தாது. இந்த விஷயத்திலும் செயற்கை முறைகள் தான் முழுப்பலன் தருமாயின் அவற்றைக் கையாளத் தயங்கலாகாது.

நம்முடைய ராஷ்டிரபதி பேரறிஞர், அவர் தவறான கருத்துக் கூறமாட்டார். ஆதலால் எல்லோரும் எந்த முறை நிச்சயமாகப் பயன் தருமோ, அந்த முறையை அனுஷ்டிக்கப் பின்வாங்கலாகாது. ஆப்பரேஷன் முறை அத்தகையது என்பதில் ஐயமில்லை.

(3) கருத்தரிக்கும் நாட்களில் காதல் செய்யாதிருக்தால் குழந்தை உண்டாகாது என்றால் ஆப்பரேஷன் முறையை விட்டுவிட்டு இந்த முறையைக் கையாளலாம் அல்லவா ? எனச் சிலர் கேட்பர்.

இந்த முறையைக் கையாளவேண்டுமானால் கருத்தரிக்கும் நாட்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.



(விபரம் : 8-ஆம் பக்கம் பார்க்க )

படங்களைப் பார்த்தால், இரண்டு சினைப் பைகள் இருப்பது தெரியும். சாதாரணமாக ஒரு மாதத்துக்கு ஒரு முட்டை இந்த மாதம் வலது சினைப்பையிலிருந்து வெளியானால் அடுத்த மாதம் இடது சினைப் பையிலிருந்து வெளியாகும் சினைக் குழாயின் விரல்கள் அதைக் கிரகித்துச் சினைக்குழாய் வழியாக அனுப்பும். அம் முட்டை கருப்பையை அடைய ஒரு நாளாகும். அந்த நாளில்தான் கரு உண்டாக முடியும்.

அந்த நாளில் கோசத்திலிருந்து குய்யத்தினுள் பாயும் விந்திலுள்ள விந்துயிர்கள் கருப்பைக்குள் சென்று அங்கிருந்து சினைக்குழாய்களுக்குள் நுழையும். முட்டையுள்ள சினைக் குழாயினுள் செல்லும் விந்துயிர்களில் ஒன்று முட்டையைக் கிழித்துக் கொண்டு அத்துடன் ஐக்கியமாகிவிடும். இவ்வாறு விந்துயிர் கலந்த முட்டை கருப்பைக்கு வந்து அதில் ஒட்டிக் கொண்டு குழந்தையாக வளரும்.

ஆகவே கருத்தரிப்பதற்குக் கட்டாயமாக வேண்டப்படுவதாகிய முட்டையானது ஒரு மாதவிடாய்க்கும் மறு மாதவிடாய்க்கு மிடையில் வெளிவந்து சினைக் குழாயில் தங்குவது ஒருநாள் தான். அந்த நாளில் காதல் செய்யா விட்டால் கரு உண்டாகாது, குழந்தை பிறக்காது, மற்ற நாட்களில் காதல் செய்யலாம். ஆனால் மாதவிடாய்களுக்கிடையில் முட்டை. வெளி வரும் அந்த நாள் எது ? அதைக் கண்டுபிடிப்பது எப்படி ? அந்த நாள் இதுதான் என்று நிச்சயமாகக் கூறமுடியுமானால் ஆப்பரேஷனும் வேண்டாம், வேறு எந்த முயற்சியும் தேவையில்லை.

ஆஸ்திரியா நாட்டு டாக்டர் காஸ் என்பவரும் ஜப் பான் நாட்டு டாக்டர் ஒகினோ என்பவரும் செய்த ஆராய்ச்சிகளின் பயனாக முட்டை வெளியாவது மாதவிடாய் காண்பதற்குப் பதினாலுநாட்களுக்கு முந்திய நாள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மாதவிடாய்க் காலம் சாதாரணமாக 28 நாட்களாயிருக்க வேண்டுமாயினும் எல்லோருக்கும் அப்படி யிருப்பதில்லை. ஒரு பெண்ணுக்கே கூட சில சமயங்களில் 23-ஆம் நாளும் சில சமயங்களில் 33-ஆம் நாளும் வருவதுண்டு. ஆதலால் மாதவிடாய் கண்டு 10- ஆம் நாள் முதல் 19-ஆம் நாள் வரைக் காதல் செய்யாதிருந்தால் குழந்தை உண்டாகாது என்று கூறுகிறார்கள்.

ஆயினும் பெண்களின் தேகாரோக்கியத்தில் ஏற்படும் வேறுபாடுகளின் காரணமாகவும், உறுப்புக்களில் ஏற்படும் வேறுபாடுகளின் காரணமாகவும் மேற் சொன்ன கணக்குப்படி நடை பெறுவதில்லை. சில சமயங்களில் முட்டையானது சம்போக வேகத்தின் காரணமாகக் காலந் தவறி வெளியே வந்து விடுவதுமுண்டு.

ஆகவே இந்த முறையைக் கையாண்டால் அநேக மாகக் குழந்தை பிறக்காது என்று கூற முடியுமேயன்றி நிச்சயமாகக் குழந்தை பிறக்காது என்று கூற முடியாது.

அதனால் ஒரு குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் சென்ற பின்னரே மறுகுழந்தை பிறக்கவேண்டும், அடுத்தடுத்துப் பெறக் கூடாது என்று எண்ணுகிறவர்கள் மட்டுமே இந்த முறையைக் கையாளலாம். மூன்று குழந்தைகள் உடையவர்கள், இனிக் குழந்தை வேண்டாம் என்று எண்ணுகிறவர்கள் இந்த முறையைக் கையாளலாகாது. ஆப்பரேஷன் முறை மட்டுமே முற்றிலும் நம்பக்கூடியது, அதனால்தான் அந்த முறையைக் கையாண்டு நலம் பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

(4) மருத்துவர்கள் ஒருவித மாத்திரை கண்டு பிடித்திருக்கிறார்கள், அதை மூன்று நாட்கள் சாப்பிட்  டால் காதல் செய்து வந்தாலும் மூன்று ஆண்டுகள் குழந்தை உண்டாகாது என்று கூறுகிறார்களே, ஆப்பரேஷன் செய்து கொள்ளாமல் அந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடலாம் அல்லவா ? எனச் சிலர் கேட்பர்.

அந்த மாதிரியான மாத்திரைகள் இருப்பதாகத்தான் அடிக்கடி பத்திரிகையில் விளம்பரங்கள் வருகின்றன. ஆனால் விளம்பரங்களை நம்பி எதுவும் செய்துவிட லாகாது. அதுபோல் எந்த மருத்துவர் கூறுவதையும் கூட நம்பிவிடலாகாது. அந்த மாத்திரையை உண்டால் குழந்தை உண்டாகாது, அந்த மாத்திரைகளால் எந்தவிதத் தீங்கும் ஏற்படாது என்று அதிகார நிலைமையிலுள்ள மருத்துவ நிபுணர்கள் அபிப்பிராயம் கூறினால் மட்டுமே அந்த மாத்திரைகளை வாங்கிப் பயன் படுத்தலாம்.

மாத்திரையைச் சாப்பிட்டு மக்களைப் பெறாதிருக்க வழியிருக்குமானால் மிகவும் நல்லதுதான். அதை எண்ணி ஐம்பது வருட காலமாக எல்லா நாடுகளிலும் ஏராளமான மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சிகள் - நடத்தி வருகின்றனர். நம்முடைய நாட்டிலும் நடந்து வருகின்றது. ஆனால் இன்னும் அத்தகைய மாத்திரை எதுவும் கண்டுபிடிக்கவில்லை. கண்டு பிடித்திருந்தால் நம்முடைய அரசாங்கம் களிம்புகளையும் உறைகளையும் பயன்படுத்துமாறோ ஆப்பரேஷன் செய்து கொள்ளுமாறோ மக்களிடம் பிரசாரம் செய்யாமல், அந்த மாத்திரைகளையே ஆயிரக்கணக்காகச் செய்து நாடு முழுவதும் எளிதாகப் பரவச் செய்துவிடும்.

ஆதலால் மூன்று குழந்தை போதும் என்று எண்ணுகிறவர்கள் விளம்பரம் செய்யும் மாத்திரைகளை வாங்கவேண்டாம் என்றும் ஆப்பரேஷனையே செய்து கொள்ளவேண்டும் என்றும் வற்புறுத்திக் கூற விரும்புகின்றேன்.

(5) கருவிகள் களிம்புகள் ஆகியவற்றைக் கொண்டு குழந்தைகள் உண்டாவதைத் தடுத்துவிடலாம் என்று கூறுகிறார்களே, அப்படியிருக்க ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்று கூறுவதன் காரணம் யாது ? எனச் சிலர் கேட்பர்.

குழந்தைகள் உண்டாவதைத் தடுப்பதற்காகப் பலவிதமான கருவிகளையும் களிம்புகளையும் மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றை வாங்கி மக்கள் பயன்படுத்தவும் செய்கிறார்கள். எந்தவிதமான தீங்கும் செய்யாமல் குழந்தை உண்டாவதைத் தடுக்கக் கூடிய கருவிகளும் களிம்புகளும் உள்ளன.

ஆனால் அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதென்றால் அதிகப் பணம் செலவாகும். அதோடு அந்தப் பொருள்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கமாட்டா, பெரிய பட்டணங்களில் மட்டுமே கிடைக்கும். அவற்றை உபயோகிப்பதிலும் பலவித சிரமங்கள் உண்டு.

நம்முடைய நாட்டிலுள்ள மக்களுள் பெரும் பாலோர் ஏழைகள், கிராமங்களில் உள்ளவர்கள். அவர்கள் கருவிகளையும் களிம்புகளையும் வாங்கிப் பயன்படுத்த முடியாது. இதை மனத்தில் வைத்துக்கொண்டு எல்லோரும் எளிதாகவும் பணச்செலவு இல்லாமலும் பயன்படுத்தக்கூடிய சாதனங்கள் பற்றி இந்த நூல் 21 ஆம் பக்கத்தில் கூறியுள்ளேன்.

இந்தச் சாதனங்களையும் அடுத்தடுத்துக் குழந்தை பெறாமலிருப்பதற்காக மட்டும் பயன்படுத்துவது நல்லது. மூன்று குழந்தைகள் பெற்ற பின்னர் மீண்டும் குழந்தைகளைப் பெறாமலிருப்பதற்கு இந்தச் சாதனங்களைப் பயன்படுத்தவேண்டாம். மூன்று குழந்தைகள் பெறு முன்னர் இந்தச் சாதனங்களை உபயோகிப்பவர் ஒரு தடவை உபயோகிக்கத் தவறினாலும் பாதகமில்லை. ஆனால் மூன்று குழந்தைகள் உள்ளவர்கள் ஒரு தடவை தவறினாலும் அந்தத் தடவை கருத்தரித்துவிடலாம். அது அவர் விருப்பத்துக்கு மாறாக நடைபெறும் காரிய மாகும். ஆதலால் மூன்று குழந்தைகள் போதும் என்று எண்ணுகிறவர்கள் ஆப்பரேஷனே செய்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு மீண்டும் குழந்தைகள் உண்டாகவே செய்யாது.

ஆகவே மூன்று குழந்தைகள் போதும் என்று எண்ணுகிறவர்கள் அந்த மூன்று குழந்தைகளையும் அடுத்தடுத்துப் பெறாமலிருப்பதற்காக நான் 21-ஆம் பக்கத்தில் சொல்லும் முறையைக் கையாளுங்கள்.

ஆனால் மூன்று குழந்தைகள் பெற்ற பின்னர் மீண்டும் குழந்தைகள் உண்டாகாமலிருப்பதற்காக ஆப்பரேஷனே செய்துகொள்ளுங்கள்.

(6) ஆப்பரேஷன் செய்த பின்னர் குழந்தைகள் வேண்டும் என்று தேவைப்பட்டால், ஆப்பரேஷனை மாற்றியமைத்துக் குழந்தைகள் பெறமுடியுமா என்று சிலர் கேட்பர். அதுவும் முடியக்கூடிய காரியமே. குழந்தைகள் உண்டாகாமலிருப்பதற்காகச் செய்யும் ஆப்பரேஷனை மாற்றி அமைக்கமுடியும். அதற்கான முறையையும் மருத்துவ நிபுணர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். அதை பிளாஸ்டிக் அறுவை மருத்துவ முறை என்று கூறுவார்கள். சென்னை ஜெனரல் மருத்துவ இல்லத்தில் அந்த முறை ஆப்பரேஷன் செய்யக் கூடிய நிபுணர் உள்ளனர்.